சிபிசிஐடி போலீசார் என்னை அழைத்து மிரட்டினார்கள் – சுசித்ரா தகவல்

பிரபல பாடகி சுசித்ரா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் தந்தை மகன் காவல் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆங்கிலத்தில் பதிவு செய்த ஒரு வீடியோ நாடு முழுவதும் வைரலாகியிருந்தது.

தற்போது சிபிசிஐடி இந்த வழக்கை கையில் எடுத்து, வழக்கை ஏற்று நடத்தி வரும் நிலையில், போலீசார் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் பாடகி சுசித்ராவின் வீடியோவில் இருக்கும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் அதுபோலீசாருக்கு எதிராக தூண்டி விடுவதை நோக்கமாக கொண்டிருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோவை யாரும் நம்பவேண்டாம் என்றும் அந்த வீடியோவை யாரும் பகிர வேண்டாம் என்றும் சிபிசிஐடி கேட்டுக்கொண்டுள்ளது.

இதனை அடுத்து பாடகி சுசித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த சாத்தான்குளம் வீடியோவை தற்போது நீக்கிவிட்டார்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாடகி சுசித்ரா ” ’சிபிசிஐடி போலீசார் என்னை அழைத்து, போலி செய்திகளை பரப்பியதாக கைது செய்யப்படுவீர்கள் என பயமுறுத்தினார்கள். அதன் பின்னர் எனது வழக்கறிஞரின் அறிவுரைப்படியே நான் அந்த வீடியோவை நீக்கியுள்ளேன். இருப்பினும் மக்கள் இந்த வழக்கை கவனத்துடன் பார்க்க வேண்டும். இந்த வழக்கில் பல தவறான நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு உள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.

CBCID police called and threatened me – Suchitra informed