யோகிபாபுவால் பணம் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானேன் – எந்த தயாரிப்பாளர் வயிற்றிலும் அடிக்க வேண்டாம் – தௌலத் தயாரிப்பாளர்

தமிழ் திரையுலகில் முன்னணியில் இருக்கும் யோகி பாபு சமீபத்தில் தனக்கும், ‘தெளலத்’ என்ற படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் யோகிபாபுவின் குறித்த தகவல்களை மறுத்துள்ள படத்தின் தயாரிப்பாளர் , நடிகர் யோகிபாபுவால் பணம் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானேன் என்று தெரிவித்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார்.

இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள தயாரிப்பாளர், ” ‘தௌலத்’ படத்தை தயாரிக்க முடிவு செய்தபோதே, இப்படத்தில் கதாநாயகனும், வில்லனும் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளும் காட்சியில் யோகிபாபு வைத்து நடிக்க வைக்க வேண்டுமென்று தீர்மானித்து தான் நடிக்க வைத்தோம். அவரும் நல்லபடியாக நடித்துக் கொடுத்தார். ஆனால், அதன்பின் அவர் நடித்த பல படங்கள் வரிசையாக வெற்றி பெற்று முன்னணி நடிகராக மாறியபின் , அவர் நடித்த காட்சிக்காக டப்பிங் பேச வராமல் இழுத்தடித்தார். நானும் அவருக்காக 9 மாதங்கள் காத்திருந்தேன். அதன்பின்தான் டப்பிங் பேசி கொடுத்தார். அவர் முன்பே டப்பிங் பேசி முடித்து இருந்தால் எப்போதோ வெளியாகியிருக்க வேண்டிய படம். அவர் குறித்த நேரத்தில் டப்பிங் பேசாததால் படம் வெளியாக தாமதமாகி மன உளைச்சலும் பண இழப்பும் ஏற்பட்டது.

மேலும், நடித்துவிட்டு இப்போது நான் நடிக்கவில்லை என்று கூறியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. ஒரு நிறுவனத்திடம் விலைபேசி இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தேன். ஆனால், இந்த செய்தி என்னை இடிபோல் தாக்கிவிட்டது. மேலும், அவர் கூறியது போல் அவர் புகைப்படத்தை மட்டும் போஸ்டரில் போட்டு நாங்கள் விளம்பரம் செய்து சம்பாதிக்க நினைக்கவில்லை. அப்படி செய்யவும் மாட்டோம். நான் சம்பளம் கொடுத்து நடிக்க வைத்த ஒரு நடிகர் தன்னை விளம்பரம் செய்யக்கூடாது என்று கூறுவது சரியா? தர்மமா? நியாயமா? யார் மீதோ உள்ள காழ்ப்புணர்ச்சியால் என் மீது பாய்ந்துள்ளார். யோகி பாபு மீது எனக்கு எந்த வருத்தமுமில்லை. எந்த நடிகரும் இதுபோல் எந்த தயாரிப்பாளர் வயிற்றிலும் அடிக்க வேண்டாம்’ என தெரிவித்துள்ளார்.

ரைட் ஆர்ட்ஸ் நிறுவனம் முகம்மது அலி தயாரிப்பில் சக்தி சிவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘தௌலத்’ என்பது குறிப்பிடத்தக்கது.

Yogi Babu latest updates

Yogi Babu latest updates