சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 7 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து படப்பிடிப்புகளும் தொடங்கிய நிலையில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க இருப்பதாகவும் ரஜனிகாந்த் அவர்களும் அதில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இதை அடுத்து ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ’அண்ணாத்த’ படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் ரஜினி உள்பட படக்குழுவினர் அனைவரும் வரும் டிசம்பர் மாதம் இரண்டாம் வாரம் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது.
இந்த நிலையில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை கவனிப்பதற்காக படக்குழுவினர் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட உள்ளதாகவும், ஒரு பிரிவினர் படப்பிடிப்பிலும், இன்னொரு பிரிவினர் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியையும் கவனிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த திட்டமிடல் காரணமாக ’அண்ணாத்த’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார். இது ஒரு கிராமத்துக் கதை சார்ந்த ஓர் ஃபேமிலி சென்டிமென்ட் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
